×

சிறுமயக்கம்... பெருமயக்கம்...

நம் அன்றாட வாழ்வில் அவ்வப்போது பார்க்கக்கூடிய பிரச்னைகளில் ஒன்றுதான் மயக்கம். இதை சின்கோப் (Syncope)என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். தமிழில் சிறுமயக்கம் என்று சொல்லலாம்.  மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் இல்லாமல் போவதே சிறுமயக்கத்திற்கான காரணம். இது பெரும்பாலும் நிற்கும் நிலையிலேயே ஏற்படும். படுக்கையில் இருந்து திடீரென்று எழும்போதோ அல்லது உளவியல் காரணங்களாலோ (அதிர்ச்சி, சோகம்) மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மயக்கம் ஏற்படுகிறது. அதன் காரணமாக கீழே தரையில் விழுகிறார்கள். இந்த சிறுமயக்கமானது தரையில் விழுந்ததும் படுக்கை நிலையில் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி மயக்கம் பெரும்பாலும் சரியாகிவிடும்.  

காரணம் என்ன?

காலை உணவைத் தவிர்ப்பது, தேவையான அளவு தூக்கம் இல்லாமலிருப்பது, கூட்ட நெரிசலில் காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் அதிக நேரம்  நிற்பது, அளவுக்கு அதிகமான வெயில் ஆகிய காரணங்களினால் சிறுமயக்கம் ஏற்படலாம். பயம், பதற்றம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களினாலும் இவ்வகை மயக்கம் உண்டாகலாம். மனக்கவலை, இழப்பு, இறப்பு  போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்டதும் மயக்கம் வருவதும், நீண்டநேரம் அழும்போது உண்டாகும் மயக்கமும் சிறு மயக்கத்தின் அங்கமே.  

அறிகுறிகள் என்ன?

கண்கள் இருட்டிக்கொண்டு வருவது, படபடப்பு, வியர்ப்பது, வாந்தி உணர்வு, சிறுநீர், மலம் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுவது, மூச்சு வாங்குவது ஆகிய அறிகுறிகள் மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரலாம். இவ்வாறான அறிகுறிகள் வரும்போது நின்ற நிலையிலிருந்து படுக்கும் நிலைக்கு, அதாவது சாய்ந்து படுத்துக் கொண்டால் மயக்கம் வருவதை தடுத்துக்கொள்ள முடியும். சிறுமயக்கமானது நிமிடங்களில் சரியாகி விடும். மயக்கம்  ஏற்பட்டவர் முற்றிலுமாக சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார்.   

பெருமயக்கம் என்பது...

பெருமயக்கம் (Unconscious state) என்பது முற்றிலுமாக சுயநினைவற்றுப் போகும் நிலையாக இருக்கும். அதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். வலிப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அல்லது கசிவு, மூளைக் காய்ச்சல், மூளையில்கட்டி, சர்க்கரை அளவில் மாறுபாடு, உடலில் உப்புச்சத்து (யூரியா, கிரியேட்டினின்)அளவு மாறுபடுதல் காரணமாக இவ்வகை மயக்கம் ஏற்படலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மயக்கம் ஏற்பட்டால் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் காரணம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும்.  

Tags :
× RELATED கல்லீரலை குறி பார்க்கும் ஹெபடைடிஸ்!