காளையார் கோவில் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களை மானாமதுரை தாலுகாவிற்கு மாற்றும் பரிந்துரை பரிசீலனையில் உள்ளது; ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: காளையார்கோவில் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களை, மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் இணைக்கும் பரிந்துரை பரிசீலனையில் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா பில்லத்தியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புளியங்குளம், பெருங்கரை மற்றும் கிழப்பிடாவூர் ஆகிய வருவாய் கிராமங்களின் கீழ் 25 கிராமங்கள் மானாமதுரை தாலுகா மற்றும் ஒன்றியத்தில் உள்ளன. ஆனால், இக்கிராமங்களுக்கான தாலுகா அலுவலகம் மட்டும் காளையார் கோவில் அலுவலத்தில் உள்ளது. 7 கி.மீ தொலைவில் உள்ள மானாமதுரைக்கு பதிலாக 44 கி.மீ தொலைவிலுள்ள காளையார்கோவிலுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, இது குறித்து விசாரிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டது. மானாமதுரை தாலுகாவிற்கு மாற்றுவது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இன்னும் எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே, தாலுகாவை மாற்றுவதற்கான பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ெஜ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் கோரிக்கை தொடர்பான கலெக்டரின் பரிந்துரை, நகராட்சி நிர்வாக ஆணையரின் பரிசீலனையில் உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் மனுதாரர் கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் அரசு தரப்பில் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: