சென்னை பல்கலை தமிழ் தாளில் குளறுபடி தவறான வினாத்தாள் வழங்கியதை விசாரிக்க விசாரணை குழு: உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகம் நடத்திய 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் நேற்று முன்தினம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் 3வது செமஸ்டர் தேர்வு நடக்க இருந்தது. ஆனால், தேர்வு தொடங்கியவுடன், கடந்த ஆண்டு நடைபெற்ற  2ம் ஆண்டு மாணவர்கள் எழுதிய 4வது செமஸ்டர் கேள்வித்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இந்த விஷயத்தை சென்னை பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து தமிழ் தேர்வு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தொழில்நுட்ப கல்வி ஆணையர் லட்சுமி பிரியா, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி ஆகியோர் கொண்ட விசாரணை குழுவினை அமைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. அந்த ஆணையில், வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். வினாத்தாள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எடுக்க  வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும், 2 மாத காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசாரணை குழுவிற்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: