ரூ.3 கோடி மோசடியில் கணவன்-மனைவி கைது

சேலம்: பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் அருகேயுள்ள நொச்சிகுளம் அடுத்த அருணகிரி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), விவசாயி. இவர் சேலம் எஸ்பி அபிநவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள வீரகனூர் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஷியாமளா அறிமுகமானார். அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கூட்டாக சேர்ந்து, பிரபல நகைக்கடையில் இருந்து குறைந்த விலைக்கு தங்க நகை வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

அதை நம்பி, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தேன். என்னை போல் பலரும் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர். ஆனால் நகை வாங்கித்தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும், எனக் கூறியிருந்தார்.

இப்புகார் குறித்து விசாரித்தனர். அதில், பள்ளி ஆசிரியை ஷியாமளா, அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேர் கும்பல், குறைந்த விலைக்கு நகை வாங்கித்தருவதாக பலரிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ஆசிரியை ஷியாமளா உள்பட 5 பேர் கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று, ஆத்தூர் மஞ்சினியில் வசித்து வந்த ஜீவா (33), அவரது கணவர் சிவக்குமார் (38) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். தம்பதியரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிவக்குமாரை சேலம் மத்திய சிறையிலும், ஜீவாவை பெண்கள் கிளை சிறையிலும் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியை ஷியாமளா, அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: