வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி

செய்துங்கநல்லூர்: வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ராட்சத இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. தென்மாவட்டங்களில் முக்கிய சந்திப்பாக திகழும் நெல்லையையும், துறைமுக நகரமான தூத்துக்குடியையும்  இணைக்கும் வகையில் நெல்லை - தூத்துக்குடி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லையையும், தூத்துக்குடியையும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது. 2012ம் ஆண்டு இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும்,  துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றன. அதேபோல் பஸ் போக்குவரத்து, தூத்துக்குடி  விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்வழியாக வாகனங்களில் பயணிக்கின்றனர். ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ல் பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது.

பாலத்தின் உறுதித்தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து துவங்கியது. தொடர்ந்து இதுவரை 8 முறை பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. தற்போது நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மட்டும் ஒரு வழியாக போக்குவரத்து நடந்து வருகிறது.

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள், ரூ.13 கோடி மதிப்பீட்டில் கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் சாலையில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் மூங்கில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், ராட்சத இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் முதல்  பாலத்தின் மேற்பகுதியில் உள்ள தார்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் அகற்றப்படும் தார் சாலை கழிவுகள், அப்படியே ஆற்றுக்குள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து நேற்று காலை ஆற்றுப்பாலத்தில் வேலை நடைபெறும் பகுதியில் விவசாயிகள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முறப்பநாடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாலத்தில் அகற்றப்படும் தார் சாலை கழிவுகளை ஆற்றுக்குள் கொட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதையேற்று லாரிகள் மூலம் தார் கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுப்படுமென போலீசார் உறுதி கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: