அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கியும் பணி நடக்கல... பெரியாறு ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா?.. கம்பம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

கம்பம்: கம்பம் அருகே சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் பெரியாறு ஆற்றின் கரை உடையும் அபாயத்தில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், ஆற்றின் கரையில் மண்அரிப்பு ஏற்பட்டபோதே விவசாயிகள் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தபோது, நிதி ஒதுக்கியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. எனவே உடையும் தருவாயில் உள்ள ஆற்றின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண் துறை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரானது சுரங்கப்பாதையின் வழியாக போர்பை டேம் கொண்டுவரப்பட்டு, பின் ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், இறைச்சல்பாலம் வழியாகவும் லோயர்கேம்ப் முல்லை ஆற்றில் சேர்ந்து, ஆற்று வழித்தடத்தின் வழியே வைகை அணைக்கு செல்கிறது.

ஆற்றில் வரும் இத்தண்ணீரை மதகுகள் அமைத்து கால்வாய்கள் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1985ல் தேசிய ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதிப்பாடு திட்டத்தில், சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு மணப்படுகை பகுதி அருகே கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல மதகு அமைக்கப்பட்டது.

இத்தலைமதகில் இருந்து சீலையம்பட்டி வரையில் பாளையம் பரவு வாய்கால் செல்கிறது. பரவு கால்வாயை இரண்டாகப்பிரித்து பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் சுமார் 5,146 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு வாய்கால்களுக்கு தண்ணீர் செல்லும் சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு மணப்படுகை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் ஒருபக்க கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததோடு, அன்றைய ஆண்ட அதிமுக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பின் ஓராண்டுக்குப்பின் இந்த பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், அதன்பிறகும் எவ்வித பணிகளும் செய்யவில்லை.இதனால் விவசாய பணிகளுக்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் சென்றுவந்த ஆற்றங்கரை, தற்போது ஆட்கள் நடமாடும் ஒற்றையடி பாதைஅளவில் மிகவும் குறுகி உடையும் அபாயத்தில் உள்ளது. ஆற்றில் அதிக தண்ணீர் வந்தால் கரையில் மண்அரிப்பு ஏற்படுகிறது. கரை உடைந்தால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் பாளையம் பரவு வாய்கால், பி.டி.ஆர்.,கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்க்கு தண்ணீர் செல்வது கேள்விக் குறியாகிவிடும்.

ஆற்றின் கரை உடைந்து பெரும் இழப்பு ஏற்படும் முன் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலகோடி ரூபாய் ஊழல்?

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான கண்மாய், தடுப்பணை, நீர்வழி பாதைகளை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய் கரைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தேனி மாவட்டத்தில் கால்வாய் கரைகள் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தல் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியில் பணிகள் எதுவும் முழுமையாக செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நிதி என்ன ஆனது?

இப்பகுதியைச்சேர்ந்த விவசாயி பொன்னையா கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டபோதே, இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் கடந்த 3 ஆண்டுக்கு முன் அதிகாரிகள் வந்து இந்த இடத்தைப் பார்வையிட்டு சென்றார்கள். அப்போது விவசாயிகளிடம் இப்பகுதியில் செக் டேம் கட்டவும், ஆற்றின் கரையைப் பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே ஆற்றில் குறைவான தண்ணீர் வரும் காலங்களில் கரையை பலப்படுத்த அரசு நடவடிகை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

Related Stories: