கரூரில் கழிவுநீர் தொட்டியில் நச்சு வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கரூர்: கரூரில் கழிவுநீர் தொட்டியில் நச்சு வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். உரிய அனுமதியின்றி கட்டப்படுவது கண்டறியப்பட்டதால் கட்டிடத்தை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என கரூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரூர்  மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குணசேகரன் என்பவர் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். இந்த கட்டுமான பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகிட்டார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி பணி முடிக்கப்பட்டிருந்தது.  

இந்த கழிவு நீர் தொட்டியில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் கடந்த 15ம் தேதி தண்ணீரை வெளியேற்றும் பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர்.

இதையறிந்த கட்டிட பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த ராஜேஷ் என்பவர் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.   இதுகுறித்து போலீசார் செய்து வீட்டின் உரிமையாளர் மற்றும் கட்டிட மேஸ்திரி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இந்நிலையில் சிவக்குமார் என்பவருடன் வேலைக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காணாமல் போன கோபால் என்பாரை தேடி வந்தனர். இந்நிலையில் சிவக்குமார் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த கழிவுநீர் தொட்டி பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது அங்கு கோபாலின் மோட்டார் சைக்கிளும், செருப்பும் கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கழிவுநீர் தொட்டியை சோதனை செய்தனர். அப்போது கோபாலும் அந்த தொட்டிக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோபாலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறாதது தெரியவந்தது. மேலும் உரிய அனுமதியின்றி கட்டப்படுவது கண்டறியப்பட்டதால் கட்டிடத்தை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என கரூர் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: