ரிப்பன் மாளிகை அருகே செல்போன் பறித்தவனை துரத்தி பிடித்த போலீஸ்

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வாலிபர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர், திடீரென 3 வாலிபர்களை வழிமறித்து கத்தி முனையில் அவர்களிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த 3 வாலிபர்களும் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.

அப்போது, ரோந்து பணியில் இருந்த பெரியமேடு போலீசார், பைக்கில் தப்பிய 2 கொள்ளையர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். இதனால், 2 வழிப்பறி கொள்ளையர்களும் பைக்கை போட்டுவிட்டு, ஒரு சிறிய சந்து வழியாக தப்பிக்க முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை விரட்டி, ஒருவனை மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பினான். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் அருண் (எ) இமான் (18) என தெரியவந்தது. இவன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் (எ) தவக்களை (20) என தெரியவந்தது. இவர்கள், செல்போன் பறிப்புக்கு பயன்படுத்திய பைக் திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அருணை கைது செய்து, செல்போன் மற்றும் திருட்டு பைக்கை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சந்தோஷை தேடி வருகின்றனர்.

Related Stories: