சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் துவக்கி வைத்தார். காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, ஊர்வலங்கள், போராட்டங்கள், திருவிழாக்களுக்கு பாதுகாப்பு, குற்ற நடவடிக்கைகள் கண்காணிப்பு, குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை என பல்வேறு பணிகள் உள்ளன.  பணிச்சுமையால் போலீசார் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், கொலை குற்றங்களை சட்டம்-ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால் வேலை பளு காரணமாக விசாரணையை தொய்வின்றி நடத்த முடியவில்லை.

எனவே, கொலை குற்றங்களை விசாரிப்பதற்கு காவல் துறையில் தனிப்பிரிவை உருவாக்கவேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.  அதனடிப்படையில், கொலை, கொள்ளை, மர்மச்சாவு, கடத்தல் வழக்கு, பெரிய விபத்துகள், சாதி, மதம் மோதல் வழக்குகளை கையாள காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடியும், காவல்துறையினருக்கான சீர்திருத்த சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.  எஸ்பி சுதாகர் புலனாய்வு பிரிவை துவக்கிவைத்து ஆய்வு செய்தார். பின்னர், மற்ற காவல்நிலையங்களிலும் இப்பிரிவை துவங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  

இப்பிரிவில் ஆய்வாளர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியின் கீழ் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மொத்தம் 12 பேர் பணியாற்றுவர். இவர்கள் கொடுங்குற்ற வழக்குகளின் விசாரணைகளை விரைந்து முடித்து தீர்வு காண்பது மட்டுமே இவர்களது பணியாகும்.  நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள் வினோத் சாந்தாராம், சந்திரசேகரன், டிஎஸ்பி ஜூலியஸ்  சீசர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

Related Stories: