தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: பயிற்சியின்போது காயம் ஏற்பட்டு மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக மரணமடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க வியாசர்பாடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்று மாணவி பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழக அரசின் சார்பாக மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்திருந்த நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவி குடும்பத்தினர் வசிக்க வீட்டிற்கான ஆணையையும், ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருந்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி, காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிகிச்சை செய்யும்போது மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக மாணவியின் காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்போது மாணவியின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்த நிலையில் மாணவி நேற்றுமுன்தினம் உயிரிழந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு தமிழக ராசியில் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: