திருவொற்றியூர் எம்எல்ஏ நிதியிலிருந்து மாநகராட்சி பள்ளிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மாநகராட்சி பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளை அகற்றிவிட்டு, புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு, கே.பி.சங்கர் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.         திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டதோடு, மழைநீர் வகுப்பறைக்குள் கசிந்திருந்தது.

மேலும், 7ம் வகுப்பறை கட்டிட மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுந்தன. இதனால், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அந்த வகுப்பறையிலிருந்து வேறு வகுப்பறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அந்த பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டுவதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தார். நிகழ்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியை லில்லி பிளாரன்ஸ், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: