பூக்கடை காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

சென்னை: சென்னை வடக்கு காவல் மாவட்டத்தில் பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்பது காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பூக்கடை காவல் நிலையம் பழமை வாய்ந்தது. மேலும் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை முக்கிய பகுதியில் உள்ளது. இதை சுற்றி மொத்த வியாபார கடைகள், நிறுவனங்கள், நகைக்கடைகள், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த காவல் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு ஐஎஸ்ஓ 9001/2015 தரச்சான்று  பெறப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை பூக்கடை காவல் நிலையத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு தரச்சான்று வழங்கினார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு இணை ஆணையர் ரம்யாபாரதி, பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி, ஐஎஸ்ஓ தரச்சான்று அதிகாரி கார்த்திக் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூக்கடை காவல்நிலையம் 1867ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது.

காவல் நிலையத்தின் தனி சிறப்பு காவல் நிலையம் முழுவதும் வெள்ளை மாளிகை போல் காட்சியளிக்கிறது. புகார் அளிக்க வருபவர்களுக்கு காத்திருப்பு அறை, அவர்களை வரவேற்று கனிவாகப் பேசி புகார் பெறுவது, குழந்தைகள் வந்தால் அவர்கள் விளையாடுவதற்கு பொம்மைகள், செயற்கை நீர்வீழ்ச்சி, மூலிகை செடிகள், மான் சிலைகள் என வித்தியாசமான முறையில் இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க வருபவர்கள் தங்களுடைய வாகனத்தை நிறுத்த வாகனம் நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  வழங்கப்படுகிறது.

மேலும் புகார் அளிக்க வருபவர்கள் கோபமாக வந்தாலும் காவல் நிலையத்தில் சூழ்நிலையை பார்த்ததும் அவர்களுடைய கோபம் குறையக்கூடும். காவல் நிலையம் என்றாலே சிகப்பு நிறத்தில் பார்த்தவர்களுக்கு இந்த காவல் நிலையம் வெள்ளை மாளிகை போல் காட்சியளிப்பது மனதில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. காவல் நிலையத்தின் மேலே சோலார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் அவர்களே உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள். இதுபோல் பல்வேறு வசதிகள் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நாம் காவல் நிலையத்துக்குதான் வந்துள்ளோமா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்ததற்கு பணிபுரிந்த ஆய்வாளர் மற்றும் போலீசாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

Related Stories: