கடலோர மாவட்டங்களில் 2 நாள் ‘சி-விஜில் 2022’ பாதுகாப்பு பணி தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 111 பேர் கைது

சென்னை: மும்பை தாக்குதல் எதிரொலியாக,  தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவாச்’ மற்றும் ‘சி- விஜில்’ என்ற பெயரில் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை கடலோர மாநிலங்களில் ‘சி-விஜில் 2022’ நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்துடன், இந்திய கடற்படை, இந்திய காவல்படை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை, மீன்வளம், கலங்கரை விளக்கம் ஆணையம், நுண்ணறிவுப் பிரிவு, க்யூ பிரிவு புலனாய்வுத்துறை, கடல்சார் வணிகத்துறை, குடியுரிமை, சுங்கம், வனம், ஓஎன்ஜிசி, சென்னை துறைமுகம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் உள்பட அனைத்து முகமைகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். குறிப்பாக, கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என 14 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இதில் கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகள், விரைவு இடைமறிப்பு படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹேரவர் கிராப்ட்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் 5 விரைவு இடைமறிப்பு படகுகள், 14 வாடகைப்படகுகள் மற்றும் 5 சிறப்பு ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது அதானி துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தில் 3 பயங்கரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 10 துறைமுக ஊழியர்களை இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை, தமிழ்நாடு காவல்தறை, கடலோர பாதுகாப்பு குழுவின் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானம் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டனர். இதுதவிர தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கென நியமிக்கப்பட்டு தமிழக கடலோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் அனுப்பிவைக்கப்பட்ட காவலர்களில் 16 இடங்களில் இடைமறிக்கப்பட்டு 111 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: