கடந்த மழையில் 33% பெய்தபோது மோசமான நிலை 46 செ.மீ. மழையிலும் அதிக பாதிப்பு இல்லை: அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி

சென்னை: கடந்த மழையின்போது 33 சதவீதம் பெய்த மழைக்கே மோசமான நிலை காணப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் 46 செ.மீ. பெய்தும் பாதிப்பு அதிகமாக இல்லை என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடந்தது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜெ.எபினேசர் வரவேற்றார்.

மேயர் பிரியா முன்னிலை வகித்தார். இதில், பொதுமக்களுக்கு கொசு வலைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். கூட்டத்தில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்  ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு கணேசன், பகுதி திமுக செயலாளர்  லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், வக்கீல் மருதுகணேஷ், வடக்கு மண்டல இணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்திற்கு பின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் திருமணம் நடத்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏதாவது கோயில்களில் அனுமதி வழங்கவில்லை என்றாலும், குறைந்த அளவாது திருமணங்கள் நடத்த இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள், கும்பாபிஷேகம் போன்ற பணிகளால் ஒரு சில கோயில்களில் திருமணம் நிறுத்தப்பட்டிருந்தாலும் சிறிய அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கோயிலை எடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. இன்னார் இனியவர் என பார்ப்பது இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்றுதான் பார்க்கிறோம். யாரும் சட்டத்தை மீறி செயல்பட முடியாது. அந்த கோயிலுக்கு வழங்கப்படும் காணிக்கைகள் முறையாக கணக்கு வைக்கப்படுகிறதா, மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகள், சொத்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என பார்க்கப்படும்.

சட்ட விதிகளை மீறி செயல்பட்டால் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது. தமிழகத்தில் 48 கோயில்களில் முழு அளவில் அன்னை தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. மீதமுள்ள கோயில்களிலும் தமிழில் அர்ச்சனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மழையில் 33 சதவீதம் மழை பெய்தபோது மோசமான நிலையில் இருந்தது. ஆனால், தற்போது 46 சென்டி மீட்டர் மழையிலும் பாதிப்பு அதிகமாக இல்லை. தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கை காரணமாக கால்வாய் பணிகள் முடிந்துள்ளன. ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்துள்ளோம்.

அதையும் விரைவாக அடுத்த பருவமழைக்குள் சரி செய்யப்படும். அடுத்தகட்ட பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும். எதிர்க்கட்சித் தலைவர் 2021 தேர்தல் பரப்புரையில் ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சிங்கப்பூர் ஆக மாறுகிறது என கூறினார். மழையின் போது என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஆட்சியில் கமிஷன், கரப்சன், கலெக்ஷன் என்ற முறையில் செயல்பட்டதால்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் அடுத்த பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆலந்தூரில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கை சவாலானது: மேயர் பிரியா பேட்டி

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், ‘‘எதிர்வரும் நாட்களில் தீவிரமடைய உள்ள பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. போரூர் ஏரி நிரம்பிய காரணத்தால் ஆலந்தூர் மண்டலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் தேங்கி நின்றது. இனி வரும் நாட்களில் வெள்ள நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஆலந்தூர் மண்டலம் மட்டுமே வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சவாலாக உள்ளது’’ என்றார்.

Related Stories: