உறுதிமொழி பத்திரம் மீறிய கஞ்சா வியாபாரிக்கு 322 நாட்கள் சிறை

அண்ணாநகர்: திருந்தி வாழப்போவதாக கூறிவிட்டு, உறுதிமொழி பத்திரத்தை மீறிய கஞ்சா வியாபாரியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.சென்னை டி.பி. சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி எழிலரசன் (49). இவர் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபியை, நேரில் சந்தித்து, ‘‘இனிமேல் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன். மறுபடியும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். இனிமேல்  திருந்தி வாழப்போகிறேன்’’ என எழிலரசன் உறுதிமொழி  பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த உறுதிமொழியை மீறி கடந்த 12ம் தேதி கஞ்சா விற்ற வழக்கில் இவரை டி.பி. சத்திரம் போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நன்னடத்தை விதியை மீறி, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாலும், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாலும், எழிலரசன் 322 நாட்கள் சிறையில் அடைக்க டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சக்தி வேலாயுதம் கீழ்ப்பாக்கம் துணை ஆணையருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவரை 322 நாட்கள் சிறையில் அடைக்க துணைஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் எழிலரசனை மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: