முகலிவாக்கம் பகுதிகளில் ஆய்வு அடுத்த ஆண்டு சொட்டு மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

குன்றத்தூர்: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம் பகுதியில் அமைச்சர்கள் நேரு, தா.மோ.அன்பரசன், நாசர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மழைநீர் தேங்கிய ஒரு சில பகுதிகளில் கூட உடனடியாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமமூர்த்தி அவென்யூ, கணேஷ் நகர், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், படகுகள் மூலம் அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்குள்ளான இடங்களை நேற்று காலை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும், அந்த பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டனர். பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

போரூர் ஏரியின் உபரிநீர் வந்ததால் இந்த பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.120 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது. அடுத்த ஆண்டு இந்த பகுதிகளில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும். அதற்காக ஆக்கிரமிப்புகள் எடுக்கும் பணிகள் விரைந்து நடந்து வருகிறது. போரூர் ஏரியிலிருந்து மழைநீரை பிரித்தெடுக்க மூன்று கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு கால்வாய் பணி முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள இரண்டு கல்வாய் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, கொளப்பாக்கம் ராமமூர்த்தி அவென்யூ, கணேஷ் நகர், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதில், சென்னை மாநகர மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: