மயிலாடுதுறை அருகே மழைநீர் வடியாததால் 33,000 ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் பகுதியில் மழைநீர் வடியாததால் 33 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொள்ளிடம் அருகே அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை, பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, மகாராஜபுரம், ஆலங்காடு, வேட்டங்குடி, வேம்படி இருவக்கொல்லை, குமரக்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 33 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிர் 5 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து நெற்பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருவதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்குள் குடியிருக்க முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் வடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களாகும் என தெரிகிறது. மீண்டும் மழை பெய்யாமல் இருந்தால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் படிப்படியாக வடியக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

சீர்காழி: சீர்காழி அருகே செம்பதனிருப்பு, அள்ளி விளாகம், நடராஜப்பிள்ளை  சாவடி, காத்திருப்பு, ராதாநல்லூர், இளைய மதுக்கூடம், நாங்கூர் உள்ளிட்ட  பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்காக 350 ஏக்கரில் செங்கரும்பு  சாகுபடி செய்திருந்தனர். சில நாட்களாக பெய்த கன மழையால்  வயல்களில் மழைநீர் புகுந்து, செங்கரும்புகள் சாய்ந்துள்ளன. தொடர்ந்து தண்ணீர் நிற்பதால் வேர் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தாராபுரத்தில் 1000 ஏக்கர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி பிரதான கால்வாய் பாசனத்தில் சுமார் 25000 ஏக்கரிலும், பழைய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனபகுதியில் 25000 ஏக்கரிலும் நெல், மக்காசோளம், தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் ஏக்கரில் மட்டும் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாராபுரம் சுற்று வட்டாரத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Related Stories: