அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியது: பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு; ராகிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவ - மாணவியர்களுக்கான வகுப்புகள் தொடங்கிய நிலையில், கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு  வகுப்புகளை நவம்பர் 15-ந்தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம்  தெரிவித்து இருந்தது.

அதன்படி, அரசு இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவ - மாணவியருக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் அந்தந்த கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிதாக வரக்கூடிய மாணவ - மாணவியரை பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மருத்துவ  கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசனை  கூட்டம் முதற்கட்டமாக நடைபெற்றது. மாணவர்களுக்கு மருத்துவர்களுக்கான உடை மற்றும் தேவையான பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. தேசிய மருத்துவ ஆணையத்தின்  ஆடைகட்டுப்பாடு விதிமுறைகளின் படி மாணவ-மாணவிகள் ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட்,  ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கல்லூரிகளுக்கு வரும் மாணவ - மாணவியரிடம் ராகிங் செய்வதை தடுக்க  பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராகிங்கில்  ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். ஏற்கனவே, நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் எஸ்.டி. பிரிவினருக்கான 1 எம்.பி.பி.எஸ். இடமும், 3 தனியார் பல் மருத்துவ கல்லூரியில் எம்.பி.சி. பிரிவில் 43 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த 44 இடங்களும், முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. அதேபோல், 2-ம் சுற்று கலந்தாய்வு இந்த வார இறுதியில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவித்த பிறகு அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: