ராமேஸ்வரத்தில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம்: தேசிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்தில் அனைத்து சுற்றுலா இடங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் என்றாலே ஆன்மிகம் கலந்த சுற்றுலாவாகத்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை வந்து சென்ற நிலை மாறி தற்போது ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் மக்கள் பார்த்து செல்கின்றனர்.

இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்யும்  பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும்  ராமர்பாதம், கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி, குந்துகால் உள்ளிட்ட பல இடங்களையும் நாள் முழுக்க சுற்றிப்பார்க்கின்றனர். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில்  இருப்பதால் குடும்பமாக வருபவர்கள் தங்களது பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட இடங்களை பார்க்கின்றனர். சொந்த மற்றும் வாடகை கார், வேன்களில்  வருபவர்கள் அனைத்து இடங்களையும் பார்த்துவிடுகின்றனர். மற்றவர்கள் இங்குள்ள ஆட்டோ, வேன்களில் மட்டுமே செல்ல முடியும். அதுவும் அதிகம் என்றாலும்கூட ஓட்டுனர்கள் கேட்கின்ற கட்டணத்தை கொடுக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் போதிய அளவில் நகர் பேருந்துகள்  இயக்கப்படுவதில்லை. அதுவும் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு ஒரு நாளில் மூன்று நான்கு முறைகளுக்கு மேல் பேருந்து செல்வதில்லை.  இதனால் குறிப்பிட்ட இடம் செல்ல பேருந்து வரும் நேரம் வரை காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் வேறு வழியின்றி வாடகை ஆட்டோ, வேன்களில் செல்லும் நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க ராமேஸ்வரம் ரயில் நிலையம், நகராட்சி பேருந்து நிலையம், அக்னி தீர்த்த கடற்கரை, ராமநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கிமீ துரத்திற்குள் இருக்கும்  இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு ஆட்டோ கட்டணமாக  ரூ.100 முதல் 150 வரை கொடுக்க வேண்டியுள்ளது.

அதுவும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வெளிமாநில யாத்திரிகர்கள் என்றால் இன்னும் கூடும். நகருக்குள் குறைவான ஆட்டோ  கட்டணம் என்பது  ரூ.50 மற்றும் 75 தான். அதுவும் ஒரு சில ஆட்டோக்களில்தான். மேலும் உள்ளூர் வாசிகள்  என்றால் அதிக தொகை கிடைக்காது என்பதால் ரயில் நிலையம் மற்றும் கூட்டமான இடங்களில் உள்ளூர் மக்களை பார்த்துவிட்டால் பார்க்காதது போல் ஓட்டுனர்கள் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.  உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் நலன் கருதி ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயம் செய்யவும், குறிப்பிட்ட  இடங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.  

 

மேலும், ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க  ராமநாதசுவாமி கோயிலை மையப்படுத்தி பத்ரகாளியம்மன்,  நம்புநாயகி அம்மன், கோதண்டராமர் கோயில், ஏகாந்தராமர் கோயில், கெந்தமாதன பர்வதத்தில் அமைந்துள்ள ‘ராமர்பாதம்’ உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளது. இதுபோல் அக்னி தீர்த்த கடற்கரை, ராமர், லெட்சுமணர், சீதா தீர்த்தங்கள், தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை, பாம்பன் குந்துகால் சுவாமி விவேகானந்தர் மண்டபம், பாம்பன் பாலம் மற்றும் பேக்கரும்பிலுள்ள கலாம் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு  சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர். இந்த இடங்களுக்கு செல்ல அடிக்கடி போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இந்த இடங்களுக்கு செல்ல  தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்குவதுடன், இந்த இடங்களை ஒருங்கிணைத்து சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வரவேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் முறையான பெர்மிட்டுடன், வெளியூர் பெர்மிட்  மற்றும் பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  ஆண்டு தோறும் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கரித்து வருவதுடன், மக்களிடம் பெறப்படும் கட்டணமும் அதிகரித்து வருகிறது. மேலும் அதீத வேகத்தில் சாலை விதிகளை மறந்து கட்டுப்பாடின்றி ஆட்டோ ஓட்டுவது,  சீருடை அணியாமல் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போக்குவரத்துத்துறை, காவல்துறை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: