தமிழகத்தில் முதன்முறையாக கூட்டுறவுத்துறையில் 3,500 கடைகள் கணினிமயம்: முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடைகளில் முதல்கட்டமாக 3,500 கடைகள் கணினிமயமாக்கப்படும் என்று கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குனர்களுக்கு பி.ஐ.எஸ், ஐ.எஸ்.எஸ்.ஓ. தரசான்றிதழ் தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் பேசிய கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: 69 வது கூட்டுறவு வார விழா 14ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய முகாமில்  கூட்டுறவு  பொருட்களை வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது குறித்து பயிற்சி  வழங்கப்பட்டது. அதேபோல், தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 22,923 கூட்டுறவு மையங்களில், 1.6 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது கூட்டுறவு மையங்களில் ரூ.67 ஆயிரம் கோடி வைப்பு நிதி உள்ளது.

கடந்த ஆண்டு  வேளாண் கடன்  மட்டும்  ரூ.10,292 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது.  இந்தாண்டு  ரூ.12,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இதுவரை  8.97 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு 1.48 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு ரூ.794 கோடி கடன் அளித்துள்ளோம். அதில், டெல்டா பகுதியில் 1.64 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,022 கோடி கடன் வழங்கினோம்.

தற்போது மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதல்வர்  அறிவுறுத்தி உள்ளார். நடப்பாண்டில் கால்நடை துறையில் 1.67 லட்சம் மக்களுக்கு ரூ.700 கோடி மேல் கடன் வழங்க பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் முதற்கட்டமாக 3500 கடைகளை முழுமையாக  கணினிமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் அடுத்த 6 மாதத்தில் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது. தற்போது 3662 ஐஎஸ்.ஓ -2015 தரச்சான்று நான்கு மாதங்கங்களில் பெறப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் திருவள்ளூர் நிர்வாகத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. அது மாநில எல்லையில் கடைசி முக்கிய  வழித்தடமாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அரிசி கடத்தல் இருக்கிறது என கருத்தில் எடுத்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: