தனியார் பள்ளியால் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல்: பள்ளி மாணவர்கள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி: தனியார் பள்ளியால் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம்-சாலையில்  தினந்தோறும் 5 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் மற்றும் அனைத்து தலைப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் இணையும் 18 கிலோமீட்டர் கொண்ட கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. இந்த சாலை ஓரத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், மேற்படி சாலை ஓரத்தில் பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தினந்தோறும் பெற்றோர்கள் தங்களது மாணவர்களை அழைத்து வந்து காலை நேரத்தில் இறக்கிவிட்டு மாலை நேரத்தில் ஏற்றி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்திவரம் பகுதியிலிருந்து பாண்டூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கும், இதேபோல் அன்றாடம் வேலைக்கு சென்று வருவதற்கும் முடியாமல்  அனைத்து தரப்பு பொதுமக்களும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: