நெமிலி அடுத்த பனப்பாக்கம்- கலப்பலாம்பட்டு தரை மட்ட பாலம் நீரில் மூழ்கியது

*உயர் மட்ட பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி அடுத்த பனப்பாக்கம்- கலப்பலாம்பட்டு  சாலை நடுவில் உள்ள கொசஸ்தலை  ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் மீது உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து பன்னியூர் செல்லும் வழியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தொடர் மழையினாலும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள தண்ணீரை வெட்டி விடுவதாலும் இந்த தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இந்த சாலையின்  வழியாக தான் கலப்பலாம்பட்டு, சிறுவளையம், பெருவளையம், ஆலப்பாக்கம், லட்சுமிபுரம், கன்னிகாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பனப்பாக்கத்திற்கு வர வேண்டும்.

இந்நிலையில் தண்ணீர் அதிகமாக வருவதால் நேற்று வாரந்தோறும் நடைபெறும் சந்தைக்கு கூட வரமுடியாமல் பெண்கள் சிரமப்பட்டனர். மேலும் இந்த தரைப்பாலத்தை மழைக் காலம் தொடங்கும் முன்னரே தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற  குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் வழக்கம் போல அவர்கள் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மழைகாலம் வரும்போதெல்லாம் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதி பட்டு வருகின்றனர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் நேற்று இந்தப் பகுதியை பார்வையிட்டு பொதுமக்கள் யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது  என்று தடை செய்யப்பட்டது என பேனர்கள் வைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நெமிலி தாசில்தார் சுமதி தலைமையில் தடை செய்யப்பட்ட பகுதி போக்குவரத்து செல்லக்கூடாது என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் பாதிப்பு

கலப்பலாம்பட்டு செல்லும் சாலை நடுவே காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கொசஸ்தலை  ஆற்றுக்கு செல்லக்கூடிய கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாராமல் இருந்ததால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனப்பாக்கம் பேரூராட்சியில் செயல்படக்கூடிய இறைச்சிக் கடைகள் இறைச்சி கழிவுகளை மூட்டை கட்டி அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றுக்குச் செல்லக்கூடிய கால்வாயில்  போடுவதால் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்புகள் ஏற்பட்டு பாலத்தின் மேல் தண்ணீர் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: