ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

சென்னை: சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி மனதார வரவேற்கிறது. எனவே, தமிழக அரசு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை, அவர்களின் வயதுமுதிர்வு, உடல்நலன், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

Related Stories: