ஊட்டி வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உலா வந்த இரட்டை கருஞ்சிறுத்தைகள்: வீடியோ வைரல்

ஊட்டி: ஊட்டி அருகே ஒன்றிய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள்  இரு கருஞ்சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி  மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட  பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். சில சமயங்களில் மனித-விலங்கு மோதல்களும் நடந்து வருகின்றது.

இந்நிலையில்  நேற்று முன்தினம் நள்ளிரவு ஊட்டி அருகே மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் உள்ள ஒன்றிய அரசின் வானியல்  ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் 2  கருஞ்சிறுத்தைகள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள கதிர்வீச்சு சேகரிப்பு  கருவிகள் வழியாக அங்கும் இங்கும் நடந்து சென்று உணவு தேடின. சிறிது  நேரத்திற்கு பின்னர் 2 கருஞ்சிறுத்தைகளும் மெதுவாக வனத்திற்குள் சென்று  மறைந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.  தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டம்  தொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: