நான்காவது சுற்று கலந்தாய்வு முடிவு இன்ஜினியரிங் படிப்பில் 93,571 பேர் சேர்ந்தனர்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் 4வது கட்ட கலந்தாய்வு முடிவில் 93 ஆயிரத்து 571 இடங்கள் நிரம்பி உள்ளன. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் 4,975 பேர் இன்ஜினியரிங் படிப்பில் அதிகளவில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் 64 ஆயிரத்து 586 சீட்டுகள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற 431 இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர 2 லட்சத்து 11 ஆயிரத்து  905  மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 80 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினர். அதில் 1,58,157 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின்படி 22,587 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 668 மாணவர்களும் இடங்களை தேர்வு செய்தனர்.

4 வது சுற்றில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேற்று இறுதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.  அவற்றில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 610 பேருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் 377 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். முதல் சுற்றில் 10 ஆயிரத்து 17 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 9,340 மாணவர்களும், 2 வது சுற்றில் 18 ஆயிரத்து 520 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்ததில் 17,650 பேரும், 3 வது சுற்றில் 24 ஆயிரத்து 727 பேரில் 23 ஆயிரத்து 450 பேரும், 4 வது சுற்றில் 30 ஆயிரத்து 938 பேருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ததில் 26 ஆயிரத்து 409 பேர் என மொத்தம் 77,226 பேர் 12ம் தேதி வரையில் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் 81,390 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 8,759 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 7,797 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் 7206 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு முடிவில் கடந்தாண்டை விட நடப்பாண்டில்  4,975 மாணவர்கள் கூடுதலாக இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனா. அரசு கல்லூரிகளில்  9.23% குறைவாகவும், தனியார் கல்லூரிகளில் 0.95% அதிகமாகவும் மாணவர்  சேர்க்கை நடைபெற்றுள்ளது.

Related Stories: