நடப்பு அரையாண்டில் எல்ஐசி பிரீமியம் வருவாய் 23.87 சதவீதம் அதிகரிப்பு

சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் எல்ஐசியின் பிரீமியம் வருவாய் 23.87 சதவீதம் அதிகரித்து, ரூ.2,30,456 கோடியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டுக்கான நிதி கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எல்ஐசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின், கடந்த செப்டம்பருடன் முடிந்த முதல் அரையாண்டில் மொத்த பிரீமியம் வருவாயாக ரூ.2,30,456 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய ரூ.1,86,053 கோடியுடன் ஒப்பிடுகையில் 23.87 சதவீதம் அதிகம். இந்த அரையாண்டில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.16,635 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.1,437 கோடியாக இருந்தது. காப்பூட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விவரத்தின்படி, எல்ஐசியின் முதலாண்டு பிரீமியம் வருவாய் 68.15 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டு முழுமைக்கும் முதலாண்டு பிரீமியம் வருவாய் 63.25 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்தது. மேற்கண்ட காலக்கட்டத்தில், 83,59,029 தனிநபர் பாலிசிக்கள் விற்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 13.55 சதவீதம் அதிகம். நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.39.51 லட்சம் கோடியில் இருந்து, ரூ.42.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இது ஆண்டுக்கு 8.69 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வாறு எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு முடிவுகள், நிறுவனத்தின் நிலையான நீடித்த வளர்ச்சியை காட்டுவதாக அமைகிறது’’ என்றார்.

Related Stories: