வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் போலீசார் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் போலீசார் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீசாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல  தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் தக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமானதாகும். குடியிருப்புகளின் சுற்றுப்புற பகுதிகள், மொட்டை மாடிகள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கும்படி இருக்கும் அவசியமற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சுற்றுப்புறங்களில் குப்பைகள் போடாமல் இருந்தால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுத்திட முடியும். நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளலாம். வீட்டுக்கு தேவையான உணவுப் பொருள்கள், எரிபொருள்கள், உயிர் காக்கும் மருந்துகள், முதலுதவிப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

தேங்கி நிற்கும் மழைநீரில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள மின்கம்பங்கள், மழைநீரில் ஊறிய சுவரில் உள்ள ஸ்விட்ச் போர்டுகள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்கவும். போலீசார் பணிக்கு செல்லும்போது, குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். பணியின்போது,  சாலைகளில் பாதாள சாக்கடை மூடி திறந்திருந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.

Related Stories: