ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய150 பேர் கயிறு கட்டி மீட்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் ஆற்றில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்டோரை, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வனத்துறை அனுமதி பெற்று செல்ல வேண்டும். நேற்று, ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்றனர். மாலை 3 மணியளவில் திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து அய்யனார் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

தரிசனம் முடித்த பொதுமக்கள் ஆற்றின் அக்கரையில் இருந்து வர முடியாமல் தவித்தனர். தகவலறிந்து ராஜபாளையம் தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், டிஎஸ்பி பிரீத்தி மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் உள்ள மரங்களில் கயிறு கட்டி 150க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஒலிபெருக்கி மூலம், ‘‘கோயில் பகுதியில் யாராவது இருந்தால், தகவல் கொடுங்கள். பத்திரமாக மீட்கப்படும்’’ என அறிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘காலையில் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்தும் மீறி சென்றவர்கள்தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வனத்துறை அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது’’ என்றனர்.

Related Stories: