அடுத்த மழையை சமாளிக்க அனைத்து இடங்களிலும் மோட்டார்கள் தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

பெரம்பூர்: அடுத்த மழையையும் சமாளிக்கும் அளவிற்கு, அனைத்து இடங்களிலும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன, என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிகேஎம் காலனி, சாய் நகர், சிவசக்தி நகர், ஹரிதாஸ் குளம், பெரியார் நகர்,  சிவசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றிவருகின்றனர். அதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 30, 40 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.

தற்போது சரி செய்யப்பட்டு 5, 6 இடங்களில்தான் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதனையும் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே, கொளத்தூர் பகுதியில் திட்டமிடப்பட்டு சில கால்வாய்கள் கட்டாமல் இருக்கிறது. அதேபோல், கொசத்தலை ஆறு திட்டத்திலும் இந்த பகுதி உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். அடுத்த ஆண்டு இந்த பகுதியில் ஒரு இடத்தில் கூட மழைநீர் தேங்காத வண்ணம் இருக்கும் என்பது உறுதி. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை. கிண்டியில் மட்டும் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

கொளத்தூர் தொகுதியில் மற்ற பகுதிகளை விட சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதல்வர் தொகுதி என்பதற்காக அல்ல, இது தாழ்வான பகுதியாக இருப்பதால், இங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக. ஏற்கனவே, இந்த பகுதியில்  திட்டமிடப்பட்ட பணிகள் ஜனவரியில் தொடங்கப்பட்டு 3 மாதத்தில் அந்த பணிகளும் நிறைவு செய்யப்படும். நேற்று காலை 9 சென்டி மீட்டர் மழை அடையாறில் பெய்தது. ஆனால், எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை தங்க வைப்பதற்கும், உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், எந்த இடத்திலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு இருப்பதுபோல மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக தாம்பரத்திற்கும், ஆவடிக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். மேலும், அடுத்த மழையையும் சமாளிக்கும் அளவிற்கு தற்போதே அனைத்து இடங்களிலும் மோட்டார்கள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.  ஆய்வின்போது, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, திருவிக நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: