மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை

சென்னை: மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன், ஒன்றிய அமைச்சர் முருகன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா சிமெண்ட்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் சீனிவாசன்.

பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு செல்ல கட்டமைப்பு மிக முக்கியமானதாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. புதிய தொழில்நுட்பம், கட்டமைப்புகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆய்வு, வளர்ச்சியில் இந்திய வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியா தற்சார்பு நாடாக உயர்ந்தது. 5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 60 கோடி மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. உலகிற்கு எடுத்துக்காட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. 2023க்குள் ஜி20 நாடுகள் பட்டியலில் இந்தியா 2ம் நிலையை பிடிக்கும். 1 லட்சத்து 51 ஆயிரத்து 760 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. யுபிஐ மூலம் 12.11 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் வாகன விற்பனை 7 லட்சத்தில் இருந்து 21 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகம் மீது பிரதமர் தனிக்கவனம் செலுத்துகிறார்; தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை கூர்ந்து கவனிக்கிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானம் 91 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஒதுக்கீடு 8,900 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 64 சாலை திட்டங்களை உருவாக்க 47,581 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக சுமார் 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா அனைத்திற்குமானது என தெரிவித்தார். மருத்துவம், பொறியியல் படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.

Related Stories: