மியான்மர், தான்சானியாவில் மீட்கப்பட்ட 8 தமிழக இன்ஜினியர்கள் சென்னை திரும்பினர்: சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தியது அம்பலம்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு தனியார் போலி ஏஜென்ட்கள் மூலம் தாய்லாந்து நாட்டில் நல்ல ஊதியத்துடன் கவுரவமான வேலை என்ற ஆசையில் அதிகளவு பணம் கொடுத்து, தான்சானியா மற்றும் மியான்மர் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய வேலை வழங்கவில்லை. அவர்களை கொத்தடிமைகள் போல் நடத்தியுள்ளனர். தகவலறிந்த தான்சானியா மற்றும் மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்களை மீட்கும் பணியில் ஒன்றிய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. முதல்கட்டமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட சில தமிழக இளைஞர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் தான்சானியா மற்றும் மியான்மரில் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 8 இன்ஜினியர்கள் தாய்லாந்து விமானம் மூலமாக சென்னை வந்தனர். இவர்களில் சென்னை முத்து, டேவிட் ராகுல், சிவகங்கை கார்த்திக், புதுக்கோட்டை அன்பரசு, வேலூர் முருகானந்தம், லிவிகுமார், கன்னியாகுமரி ராஜு, கடலூர் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 8 தமிழக இன்ஜினியர்களையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு தனி வாகனங்களில் அதிகாரிகள் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கம்போடியாவில் 16 பேர், மியான்மரில் 26 பேர் என மொத்தம் 42 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இனி அங்கு சிக்கியிருப்பவர்கள் குறித்து தகவல் தெரியவரும்போது, அடுத்தகட்ட மீட்பு பணிகள் நடைபெறும்’’ என்றார்.

Related Stories: