மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் துவக்கம் 30,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய திட்டங்கள்: அரவக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 30,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் 2வது கட்டமாக 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்புகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடாகோயிலில் நேற்று நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.

விவசாயிகளுக்கு 50ஆயிரம் கூடுதல் மின்இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளையும் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு லட்சம் இணைப்புகளை நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஒட்டு மொத்தமாக பார்க்கிறபோது ஒரு லட்சத்து 50ஆயிரம் இலவச மின் இணைப்புகள் அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால் இதைவிட மிகப்பெரிய சாதனையை நான் எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதற்குமுன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையை செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசு தான் செய்து காட்டியிருக்கிறது. ஏன், இந்தியாவிலே எந்த மாநிலத்திலாவது செய்திருக்கிறர்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. நம்முடைய மாநிலம் தான், தமிழ்நாடு தான் அந்த சாதனையை செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன் எழுத்துக்களால் பொறிக்க கூடிய நாள் என்று சொன்னேன். நான் வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை பார்த்தேன். தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட, உணவு உற்பத்தி பெருகிட 50ஆயிரம் கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்ட தொடக்க விழா பயனாளிகளுடைய விபரம் என்று ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். அதை புரட்டி பார்த்தேன். உடனே அமைச்சரிடத்தில் கேட்டேன்.

இன்றைக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு என்று விளம்பரப்படுத்தி விழாவை நடத்தி கொண்டிருக்கிறோமே, அதனுடைய விபரமா என்று கேட்டேன். இல்லை 50ஆயிரம் பேரை இந்த திடலுக்குள் அழைத்து வந்து உட்கார வைக்க இடம் இல்லை. எனவே 20 ஆயிரம் பேரைத்தான் அழைத்திருக்கிறோம். அந்த 20ஆயிரம் பேர்களின் பெயர் இந்த புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. பெயர், முகவரி மட்டுமில்லை. அவர்களுடைய செல்போன் உட்பட முழுமையாக சேகரித்து இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ பேசிவிட்டு செல்கிறவர்கள் அல்ல. அதை செய்து காட்டக்கூடியவர்கள் நம்முடைய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அந்த வகையில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.

ஒரு இலக்கை தனக்கு தானே வைத்துக் கொண்டு, அதை முடித்து காட்டக்கூடிய வல்லவர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்க கூடியவர்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஒரு ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்\குவோம் என்று ஏற்கனவே அறிவித்தோம். அப்போது எல்லாரும் என்ன நினைத்தார்கள் என்றால் இது நடக்குமா, சாத்தியமா? முடியுமா? என்று பலமுறை கேள்வி எழுப்பினார்கள். நடக்குமா என்று கேட்பதை நடத்தி காட்டுவதும், சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும் தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த 10 ஆண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது. அது எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். அந்த 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால், நாம் இந்த 15 மாத காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம், இது கலைஞரின் முழக்கம். சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் இது தான் ஸ்டாலினுடைய முழுக்கம். பாசன பரப்பும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 34ஆயிரத்து 867 மெகா வாட். மின் தேவையை கருத்தில் கொண்டு, அனல்மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் வரும் 2030ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6,000 மெகா வாட் சூரிய ஒளி மின் நிலையங்களும், 14,500 மெகா வாட் நீரேற்றுப்புனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2,000 மெகா வாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 2,000 மெகா வாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்களும் என மொத்தம் 30,500 மெகா வாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வரும் 2030ம் ஆண்டில் 65ஆயிரத்து 367 மெகா வாட் திறனாக உயரும். முக்கியமாக, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது மின் உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாக திகழும்.

* காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

அகில இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடம். 1528 மெகா வாட் புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, இந்திய அளவில் சூரியஒளி மின் உற்பத்தியில் நான்காவது இடம். 11.09.2022 அன்று, மரபுசாரா எரிசக்தியின் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 74 சதவீதம் பங்களிப்பு செய்து இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம். என இப்படி பல்வேறு சாதனையை படைத்திருக்கிறோம் என முதல்வர் தெரிவித்தார்.

* பொற்கால ஆட்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது உணவுப்பொருட்களின் விலையும் குறைவாக உள்ளது. விலைவாசி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகமாகி உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி தரப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பெண்களின் பொருளாதார வலிமை கூடியிருக்கிறது. பல்வேறு சமூக நலத்திட்டங்களின் மூலமாக வாழ்க்கை தரம் தமிழகத்தில் நிலையானதாக அமைந்திருக்கிறது.இவை அனைத்தும் நம்முடைய பொற்கால ஆட்சியின் அடையாளங்கள். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அதிகளவில் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கு இவையெல்லாம் அடையாளம் என்றார்.

* கொட்டும் மழையிலும் குவிந்த கூட்டம்

கரூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று காலையும் மழை விடவில்லை. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினர், பொதுமக்கள் குவிந்தனர். இதனால் விழா அரங்கமே நிரம்பி வழிந்தது.

* பச்சை துண்டுடன் முதல்வர்

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சை துண்டு அணிந்து கலந்து கொண்டார். அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாட்டு வண்டி பொம்மையை நினைவு பரிசாக வழங்கினார். மேலும் இந்தியாவிலே முதன்முறையாக கரூர் மாவட்டம் கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேவாங்கு படம் பொறித்த சிறப்பு நினைவு பரிசும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: