இங்கிலாந்து உலக சுற்றுலா சந்தையில் தமிழ்நாடு அரங்கம்: அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

சென்னை: இங்கிலாந்தில்  நடைபெற்ற உலக சுற்றுலா சந்தையில் தமிழ்நாடு சுற்றுலா அரங்கத்தை அமைச்சர்  மதிவேந்தன் திறந்து வைத்துள்ளார். இதுகுறித்து, தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை: இங்கிலாந்து மக்களிடையே தமிழ்நாடு சுற்றுலா தலங்களின் சிறப்புகளை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் கடந்த 7, 8, 9 தேதிகளில் நடந்த உலக சுற்றுலா சந்தை -2022ல் தமிழ்நாடு சுற்றுலா அரங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சற்றுலா அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் சுற்றுலா தொழில் முனைவோர்களான விடுதி மற்றும் உணவகம் நடத்துபவர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சுற்றுலா மேம்பாட்டு அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஸ்காட்லாந்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் மூலம் ரோடு ஷோ நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் எடின்பர்க்கிலுள்ள இந்தியாவிற்கான தலைமை துணை தூதர் பிஜய் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்காட்லாந்து இந்திய தூதரகத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பரத நாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் மற்றும் தகவல்கள் தூதரகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய தூதரக உயர் அலுவலர்கள், ஸ்காட்லாந்து வாழ் தமிழர்கள், மருத்துவர்கள், தொழில் முனைவோர், சுற்றுலா, வரலாறு மற்றும் காலநிலை மாறுபடும் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வலர்கள் பார்வையிட்டனர். மேலும் ஸ்காட்லாந்து பிராந்திய பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வடக்கு அயர்லாந்திலும் தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா ரோடு ஷோ நடத்தப்பட்டன. லண்டன் நகரில் தமிழ்ச் சங்கங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்கள் குறித்து விளக்கப்பட்டது.

Related Stories: