மதுபான ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை மாற்றிய 34 பேர் யார்? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: டெல்லி அரசின் ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை துணை முதல்வர் உள்ளிட்ட 34 பேர் மாற்றியதாக அமலாக்கத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் கலால் வரிக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கலால் வரிக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 30க்கும் மேற்பட்ட விஐபிக்கள், தங்களது செல்போன் டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்தில் 140 செல்போன்களை புதியதாக மாற்றி உள்ளனர்.

மதுபானக் கொள்கையை  அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, சில மதுபான உற்பத்தியாளர்களிடம் அவர்கள் பேசிய பேரங்கள் கசிந்துவிட்டதாக எழுந்த புகாரால், தங்களது டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 34 முக்கிய நபர்கள் (மதுபான வியாபாரிகள், மூத்த அரசு அதிகாரிகள், டெல்லியின் கலால் அமைச்சர் மற்றும் பிற சந்தேக நபர்கள்), தங்களது டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் 140 செல்போன்களை (சுமார் ரூ. 1.20 கோடி) மாற்றியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: