ஆலந்தூர் மண்டல கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல குழு கூட்டம், மன்ற கூடத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் வளர்மதி, சுகாதார நல அலுவலர் டாக்டர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 37 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாத வருமாறு:

பாரதி வெங்கடேஷ் (திமுக): தெருக்களில் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

உஷாராணி (அதிமுக): மணப்பாக்கம் பெல்நகரில் 2 மாதமாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. மணப்பாக்கம் சத்யா நகர் ஆற்றோரம் மயானம் சீரமைக்க வேண்டும் ஆற்றோரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு கொசு வலை வழங்க வேண்டும்.

பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன் (திமுக): மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான கிட் வழங்கப்படாமல் உள்ளது. மண்டல அலுவலகம் உள்ள புதுத்தெருவில் மழைநீர்தேங்கி நிற்கிறது, வரி கட்ட வருபவர்களிடம் அதிகாரிகள் போன் நம்பர் கேட்ட பின் மீண்டும் அளக்க வேண்டும் என மிரட்டுவதை தடுக்க வேண்டும், பெண்கள் உடற்பயிற்சி கூடம் அமைய இடம் ஒதுங்கி கொடுத்தும் பணி நடைபெறாமல் உள்ளது. ஆலந்தூர் ஜால் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடம் சீரமைக்க ரூ.29 லட்சம் ஒதுக்கியும் பணி துவங்கப்படாமல் உள்ளது என்றார்.

செல்வேந்திரன் (திமுக): எனது வார்டுக்குட்பட்ட முகலிவாக்கத்தில் சாலைகளை செப்பனிடாததால் பேருந்து இயக்கப்படவில்லை., நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.

நாஞ்சில் பிரசாத் (காங்): ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் கால்வாய் அடைப்புகளை சீரமைப்பதில்லை. எனது வார்டுக்கு லாரி, சிறு ஜேசிபி வருவதில்லை. பழைய மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். பூங்கா இடத்திற்கு தனியார் பட்டா வாங்கியுள்ளார் அதனை ரத்து செய்ய வேண்டும். வார்டுக்கு ஒரு இ-சேவை மையம் கொண்டு வர வேண்டும்.

சாலமோன் (திமுக): ஒரே தெருவில் உள்ள வீட்டிற்கு வீடு வரி வித்தியாசம் உள்ளதை சீரமைக்க வேண்டும்.

துர்கா தேவி நடராஜன் (திமுக): எனது வார்டில் குப்பையை அகற்ற வேண்டும். நங்கநல்லூரில் 45வது தெருவில் சிறு பாலம் அமைத்து, 6வது பிரதான சாலையில் இணைக்க வேண்டும். கண்ணன் நகர் 3வது பிரதான சாலையிலிருந்து, மழைநீர் வடிகால் அமைத்து மேடவாக்கம் சாலையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

பூங்கொடி ஜெகதீஸ்வரன் (திமுக): ஆதம்பாக்கம் கருணிகர் தெருவில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது இதனை சரி செய்ய வேண்டும்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து, மண்டல குழு தலைவர் என்.சந்திரன் பேசியதாவது: பள்ளிக்கூட கழிப்பறைகளில் காவலாளிகள் அமைக்க பட்டியல் தர வேண்டும், மெட்ரோ குடிநீர், கழிவுநீர் வாரிய அதிகாரிகள் மெத்தன செயலை கைவிட வேண்டும், பல இடங்களில் குடிநீரில் சாக்கடையில் கலப்பதாக புகார்கள் வருகின்றன அதனை உடனே சரி செய்யவும், வீட்டு குப்பைகளுக்கு அபராதம் விதிப்பதை தவிர்தது தனியார் குப்பை நிறுவனம் மூலம் அகற்ற வேண்டும், மழைநீர் கால்வாய் பணிகள் சாலை பணிகள், போன்றவற்றை அதிகாரிகள் உடனே முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: