அண்ணாநகர் மண்டலத்தில் 15 இடங்களில் சிறப்பு முகாம்: சுகாதார அலுவலர் தகவல்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், அமைந்தகரை, வில்லிவாக்கம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், டிபி.சத்திரம், கோயம்பேடு, விருகம்பாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதுபோல் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில், சுகாதார அலுவலர்கள் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் 24 நேரமும் செயல்பட்டு கழிவுகளை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார அலுவலர் கூறுகையில், ‘‘அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் ஒரு நாளைக்கு 15 முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை பகுதி மற்றும் இதர பகுதிகளில் வீடு தோறும் குளோரின் மாத்திரை வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் முன்னெச்சரிக்கையாக குளோரின் மாத்திரை வினியோகம் செய்து ஒரு மாத்திரையை 15 லிட்டர் குடிநீரில் கலந்து 2 மணி நேரம் கழித்து பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை இருப்பதால், தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றாலும், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும், மரங்கள் சாலைகளில் விழுந்தாலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். 10வது மண்டலத்துக்கு உட்பட்ட கோயம்பேடு, நெற்குன்றம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: