7 ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழா: 4 மாவட்ட மக்கள் தரிசனம்

மதுரை: மதுரை அருகே நடந்த ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் இன்று 6 சப்பரங்கள் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தன. 4 மாவட்ட மக்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, தேவன்குறிச்சி, வி.சத்திரப்பட்டி, கிளாங்குளம், வி.அம்மாபட்டி, காடனேரி ஆகிய 7 கிராமங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை துவங்கியது. மேலும் இத்திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது, இதையொட்டி அம்மாபட்டியை தவிர, 6 கிராமங்களிலும் சப்பரம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. மூங்கிலில் ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை வடிவமைக்கப்பட்டிருந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். இங்கு மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 ஊர் அம்மன்களுக்கும் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின் 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒவ்வொரு கிராமத்தினரும் அம்மனை பெற்று கொண்டு சப்பரத்தில் வைத்து ஊர் திரும்பினர். பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்களை வடம் இடிப்பது வழக்கம். ஆனால், இங்கு மட்டும் கிராம மக்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும். இன்று நடந்த சப்பர திருவிழாவை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை சரிசெய்வதற்காக திருமங்கலம், டி. கல்லுப்பட்டி, ராஜபாளையம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையின் வழியாக இயக்கப்பட்டன.

Related Stories: