மூணாறு தனியார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு

மூணாறு: மூணாறில் உள்ள தனியார் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் மூணாறு. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான மூணாறில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதற்கு முன்பு பழைய மூணாறில் செயல்பட்டு கொண்டிருந்த தனியார் பேருந்து நிலையம் மூணாறு நகரில் உள்ள தபால் நிலையம் சந்திப்புக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது .எனினும் போதிய அடிப்படை வசதிகள் இங்கு செய்து கொடுக்கப்படவில்லை.  இதுவரை இங்கு காத்திருப்பு மையம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கழிவறை வசதியும் இங்கு இல்லை.

இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் அவதியுறுகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தோடு சேர்ந்து ஆட்டோ ஸ்டாண்ட்டும் உள்ளது. மூணாறில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என பல ஆண்டுகளாக அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பயணிகளின் நலன்கருதி, உடனடியாக பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மையம் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: