படைகள் எப்போதும் உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும்: ராணுவ தளபதிகளுடனான உரையாடலில் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்..!

டெல்லி: படைகளை எப்போதும் உச்சபட்ச தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பிலும் அதிக உயிர் பலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவமும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், கிழக்கு லடாக் எல்லையில் முற்றிலும் அமைதி திரும்பவில்லை.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில் படைகளை எப்போதும் உச்சபட்ச தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ராணுவ  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு கடந்த 7ல் தொடங்கியது. டெல்லியில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் உயர்மட்ட அளவிலான ராணுவ தளபதிகள் மாநாட்டின் 3ம் நாளில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். குறிப்பாக எதிர்கால மாற்றத்திற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லையில், நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனம் செய்து வருகிறது. இந்நிலையில், நம் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்ற எழுச்சியூட்டும் அமைப்பாக இந்திய ராணுவம் இருக்கிறது. அதை நாம் காப்பாற்ற வேண்டும். ராணுவத்தினர் மீதும், அதன் தளபதிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எல்லையை காப்பதிலும், பயங்கரவாதத்திற்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் இந்திய ராணுவம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பாராட்டினார்.

Related Stories: