இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக, காங். இடையே இழுபறி உருவாகலாம்: கருத்துக்கணிப்பில் தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி உருவாகலாம் என்று ஏபிபி - சி வோட்டரின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் சாதகமான வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு அதாவது கடந்த அக்டோபர் மாதத்தில் ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அப்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 50%க்கு அதிகமானோர் ஆதரவாக வாக்களித்த நிலையில் சமீபத்திய கருத்துக் கணிப்பில் அந்த எண்ணிக்கை 46%ஆக குறைந்துள்ளது.

அக்டோபர் மாத கருத்துக்கணிப்பில் 35.5% பேர் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கணித்திருந்த நிலையில் தற்போது 43% பேர் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் என்று ஏபிபி - சி வோட்டரின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 3 வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் வாக்களித்த 49% பேர் இந்த தேர்தலில் வேலையின்மை முக்கிய பிரச்சனையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலைகளில் கவனம் தேவை என 16% கருதுகின்றனர். 7% பேர் அரசு பணிகளில் நடக்கும் ஊழலை மிகப்பெரிய பிரச்சனையாக குறிப்பிடுகின்றனர். 1971-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த எந்தஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: