இந்தி மொழி திணிப்பை ஒன்றியஅரசு கைவிட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி தலைவர் பேட்டி

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி கூறியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, செயலாளர் அப்துல் சத்தார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

பின்னர், எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை, மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றிய அரசு மதரீதியான பிரச்னைகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் பிரச்னைகள் குறித்து கவலைப்படாமல் இமாச்சலபிரதேச தேர்தலில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவோம் என தேவையற்ற வகுப்புவாத பேச்சுகளை பேசுவதன் மூலமாக மக்களை மடைமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்க்கக்கூடிய ஜனநாயக சக்திகள் அனைத்தும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரளவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது. 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியும் ஒரு மனுதாரர் என்பதால், தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கை, இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கை தவறானது. இந்தி மொழிக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இந்தி மொழி திணிப்புக்கு எதிரானவர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: