சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் கட்டப்பட்ட கார் பார்க்கிங் வீணாகும் அவலம்: உடனடியாக திறக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 6 அடுக்குமாடி கார் பார்க்கிங் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் ரூ.250 கோடி வீணாகி வருவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பில் 6 அடுக்குமாடிகளுடன் கூடிய அதிநவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டிடம் இந்த ஆண்டு துவக்கத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம். அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் புதிய கார் பார்க்கிங் கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என இந்திய விமானநிலைய ஆணையம் தகவல் தெரிவித்தது. சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானநிலைய நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

இந்த வாகன நெரிசலில் பயணிகள் சிக்கி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக புதிய கார் பார்க்கிங் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால், மக்கள் பணம் ரூ.250 கோடி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் விமான நிலைய நிர்வாகம் மீது குற்றம்சாட்டுகின்றனர். சென்னை விமான நிலையத்தில் புதிய கார் பார்க்கிங் கட்டிடம் செயல்பாட்டுக்கு வர தீயணைப்பு துறையினரின் தடையில்லா சான்று கிடைக்காதது மட்டும் காரணம் இல்லை. இக்கட்டிடம் விமானநிலைய வளாகத்துக்குள் உள்ளதால் பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கார் பார்க்கிங்கில் சுமார் 2 ஆயிரம் கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம்.

Related Stories: