சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல், அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.