‘செல்லாத நோட்டு’ பற்றி பேச தயாரில்லை: ஓ.பி.எஸ்.சுடன் இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு

காடையாம்பட்டி: ஓபிஎஸ்சுடன் மீண்டும் இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை என ஓமலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று, இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் வளர்ச்சிப்பணிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தொலைக்காட்சியில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைய உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி நீக்கினோம். உச்சநீதிமன்ற நீதிபதியே பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். சட்ட விதிகளின்படி 2500 உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவு. இதில் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது.

அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். எம்ஜிஆரின் சட்ட விதிகளின்படிதான் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. செல்லாத நோட்டை (ஓபிஎஸ்) பற்றி நான் ஏன் பேச வேண்டும். தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், நாம் ஆளுங்கட்சியில் இருக்கும் போதும் நம்மைப் பற்றித்தான் பேசினார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மைப் பற்றிதான் பேசுகிறார்கள். அதிமுக பற்றி பேசினால் தான் மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories: