பெங்களூரில் விற்பனை கடைகளுக்கு சீல் மாவட்டத்தில் தினசரி ரூ.50 லட்சம் கொய்மலர்கள் தேக்கம்-விவசாயிகள் கவலை

குன்னூர் :  பெங்களூரில்  44 கொய்மலர் விற்பனை கடைகளுக்கு சீல் வைத்ததால் நீலகிரி மாவட்டத்தில் தினசரி ரூ. 50 லட்சம்மலர்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் பலகிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய் மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்களை  தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திரா, கோவா பேன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது மட்டுமின்றி லண்டன், துபாய் போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் இருந்து மலர்களை அதிகளவில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். நீலகிரியில் கார்னீஷன், லில்லியம், ஜெர்பெரா, க்ரஷாந்தம், ஈஸ்டோமா, ஹைட்ராஜ்ஜியா உட்பட  15-க்கும் மேற்பட்ட வகை கொய் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.  தினசரி மாவட்டம் முழுவதிலும் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொய்மலர்கள் பெங்களூர் பகுதியில் உள்ள வில்சன்  கார்டன் என்ற பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் கர்நாடக அரசு அந்த பகுதியில் விற்பனை செய்வதால் குடியிருக்கும் மக்களுக்கு இடையூறாக உள்ளது என  கூறி  44 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பெங்களூர் பகுதிக்கு கொய் மலர்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அம்மாநில அரசு அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் தினசரி  ரூ. 50 லட்சம் மதிப்பிலான கொய்மலர்கள் தேக்கமடைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பூக்கள் பூத்து அழுகும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட மலர் சாகுபடி சங்க தலைவர் வாஹித் சேட் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 200-கற்கும் மேற்பட்டோர் இந்த மலர் சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் பெங்களூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்த பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு அனுப்படுகிறது.

தற்போது பெங்களூரில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் 44-க்கும் மேற்பட்ட விற்பனை கடைகள் உள்ளன. அந்த கடைகளை கர்நாடக அரசு திடீரென குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகள் பூக்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநில அரசு உடனடியாக கொய் மலர்கள் விற்பனை செய்ய வேறு இடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: