10% இடஒதுக்கீடு விவகாரம் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 12ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள்  கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியிருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உள்ளிட்ட 2 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திராவிட கட்சி தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு  விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.  இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (7ம் தேதி) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12ம் தேதி காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.  

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: