கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து உதவ வேண்டும்: அங்காடி நிர்வாகம் வேண்டுகோள்; ஒத்துழைப்பு தருவதாக வியாபாரிகள் உறுதி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனை ஆகாமல் வீணாகும் காய்கறிகளை ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து உதவுமாறு அங்காடி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தருவதாக வியாபாரிகள் உறுதி அளித்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூ என்று தனித்தனியாக கடைகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் தினமும் ஏராளமான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனையாகாமல் கீழே கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு, வீணாக கொட்டப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘காய்கறி மார்க்கெட்டில் தினமும் விற்பனையாகாமல் தேங்கும் காய்கறிகளை வீணாக்காமல் அங்காடி நிர்வாக குழுவிடம் கொடுக்க வேண்டும். இதுபற்றி பேனர் மூலமாக வியாபாரிகளுக்கு அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்படும் காய்கறிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மேலும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கும்போதும் பறிமுதல் செய்யப்படும் அனைத்து காய்கறிகளும் வீணாக்காமல் தினந்தோறும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தால் வியாபாரிகள் முன்வந்து அங்காடி நிர்வாக குழுவிடம் கொடுத்தால் அதனை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். இதற்கான அறிவிப்பு பலகையும் கோயம்பேடு மார்க்கெட் சுற்றுவட்டார பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட கீழ்ப்பாக்கம், முகப்பேர், அம்பத்தூர், அண்ணாநகர், மதுரவாயல், பூந்தமல்லி, புது வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், மயிலாப்பூர், வில்லிவாக்கம், அயனாவரம், அரும்பாக்கம், அமைந்தகரை, டி.பி.சத்திரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் இயங்கி வருகிறது. இதில், முதல்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து காய்கறிகளும் ஆசிரமத்திற்கு அனுப்பப்படும். இதற்கு ஒத்துழைக்க வியாபாரிகள் முன் வரவேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘மீதமாகும் காய்கறிகளை வீணாக்காமல் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுக்க வியாபாரிகள் முன்வர வேண்டும் என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். எனவே, விற்பனையாகாத  காய்கறிகளை கொடுப்பதற்கு முன்வந்துள்ளோம். இந்த காய்கறிகளை வீணாக்காமல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அங்காடி நிர்வாக சார்பில் கொடுக்கப்படுவதை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்’’ என்றனர்.

Related Stories: