மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மழையால் ஒதுங்கிய கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

சென்னை: மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மழையின் காரணமாக கரை ஒதுங்கிய கழிவுகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக ஏற்பட்ட சேறு, சகதி மற்றும் திடக்கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டலங்கள் 1, 2, 3 மற்றும் 7ல் சென்னை என்விரோ நிறுவன பணியாளர்களும், மண்டலங்கள் 4, 5, 6 மற்றும் 8ல் மாநகராட்சி பணியாளர்களும், மண்டலம் 9 முதல் 15 வரை உர்பேசர் நிறுவன பணியாளர்கள் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர்த் தேக்கம் ஏற்பட்ட இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் எளிதில் வடிந்து செல்லும் வகையில் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் மழையின் காரணமாக திடக்கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் கடற்கரை ஓரங்களில் தேங்கின. இந்த கழிவுகள் கடல்களில் கலக்கும் பொழுது அங்கு வாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளின் கடற்கரை ஓரங்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அகற்றிடும் வகையில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: