சென்னையில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா கொசு வலைகளை வழங்கிய அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா கொசு வலைகளை அமைச்சர் கே.என். நேரு அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்கள். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொது மக்களுக்கு கொசுக்களினால் ஏற்படும் வியாதிகளைத் தடுக்கும் விதமாக விலையில்லா கொசு வலைகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தலைமையில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் இன்று (08.11.2022) இராயபுரம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 3,278 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 224 கைத்தெளிப்பான்கள், 120 விசைத்தெளிப்பான்கள், 224 கையினால் எடுத்து செல்லக்கூடிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 67 புகைப்பரப்பும் வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு கொசுத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆங்காங்கே மழைநீர் தேங்கும் இடங்களில் தேவையற்ற பொருட்களை அகற்றும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரை அட்டவணை தயாரிக்கப்பட்டு, கொசுத் தடுப்பு பணிகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும்  நோய்களைத் தடுக்க நீர்வழித்தடங்களின் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடும்பத்திற்கு ஒன்று  வீதம்  2,60,000 கொசு வலைகள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக அமைச்சர் பெருமக்கள் இன்று கொசு வலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள கொசு ஒழிப்புப் பணிகளை தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

Related Stories: