கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் வாதம்

சென்னை: நெருக்கடி நிலை காலங்களில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் கல்வி பொதுபட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அறம் செய்ய விரும்பு அமைப்பு சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி முழு அமர்வு மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42-வது திருத்தம் விஷ மரம் என்று மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கல்விக்காக மாநில அரசுகள் அதிக நிதி செலவிடுவதாகவும் ஒன்றிய அரசு குறைவாகவே செலவிடுவதாகவும் என்.ஆர்.இளங்கோ குறிப்பிட்டார்.

கல்வியை மாநில அரசுகளே திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் நெருக்கடி நிறைந்த காலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி இருந்ததால் தமிழகம் மேகாலயா 42-வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் என்.ஆர்.இளங்கோ வாதித்தார். கடந்த 1978-ம் ஆண்டு கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்ட திருத்தம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட போதும் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் வாதம் மீண்டும் தொடர்கிறது.

Related Stories: